Thursday, October 15, 2009

என்னைப் போல் ஒருவனா நீ? (சினிமா விமர்சனம் : ஞாநி)

உன்னைப் போல் ஒருவன் என்று படத்தின் தலைப்பு சொல்கிறது. பார்வையாளனான என்னைப் பார்த்து உன்னைப்போல் ஒருவன் என்று சொல்வதாகத்தான் பெரும்பாலும் அர்த்தப்படுத்திக் கொள்கிறோம். அது சரியான அர்த்தம் தானா? படத்தில் பெயர் இல்லாத நாயகனே, என்னைப் போல் ஒருவனா நீ?! நான் மனசாட்சியின் குரலுக்கு எப்போதும் செவி கொடுக்கிற ஒரு நடுத்தர வகுப்பு மனிதன்.


என்னால் பிறருக்கு வலியும், பிறரால் எனக்கு வலியும் ஏற்படக்கூடாது என்று விரும்பும் சாதாரண மனிதன். ஜாதி, மதம், மொழி, இனம் அடிப்படையில் மனிதரை மனிதர் உயர்வு தாழ்வு பார்க்கக் கூடாது என்று விரும்பும் ஒருவன். குற்றம் சாட்டப்பட்ட எவரும் முறையாக விசாரிக்கப்பட்டு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என்றே விரும்புகிறவன். கொலைக் குற்றவாளிக்குக் கூட அதிகபட்சமாக ஆயுள் தண்டனையே தரப்படலாமே தவிர, மரண தண்டனை கூடாது என்று நினைக்கிறவன்.
சட்டத்தை என் கையில் எடுத்துக் கொள்ள ஆசைப்படாதவன். நீ என்னைப் போல் ஒருவனா? நிச்சயம் இல்லை. எனக்கு எல்லா தீவிரவாதமும் அருவருப்பானது. நீ இஸ்லாமிய தீவிரவாதத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து எதிர்க்கிறாய்.




மேலவளவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் தலைவர் முருகேசனைக் கொன்றவர்களும், தருமபுரியில் அப்பாவியான கல்லூரி மாணவிகளை பேரூந்திலேயே வைத்து எரித்தவர்களும், மதுரையில் பத்திரிகை அலுவலகத்தை தாக்கி அப்பாவி ஊழியர்களைக் கொன்றவர்களும் இது போன்ற எண்ணற்ற தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் பலரும் தமிழகச் சிறையில் தான் இருக்கிறார்கள். 



அவர்களை விசாரணை இல்லாமல் கொல்ல வேண்டும் என்ற கோபம் உனக்கு வரவில்லை. இஸ்லாமிய தீவிரவாதிகளையும் அவர்களுக்கு உதவி செய்ததால் ஹிந்து வெடிமருந்து வியாபாரியையும் கொல்லப் புறப்படுகிறாய். 



உனக்கு ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து விற்றவன் மட்டும் மகாத்மா காந்தியா? அவனை ஏன் கொல்லாமல் விட்டிருக்கிறாய்? அவனிடம் ஆர்.டி.எக்ஸ் தொடர்ந்து வாங்கியவர்கள் / வாங்குகிறவர்கள் எல்லோரும் உன்னைப்போல தீவிரவாத எதிர்ப்பாளர்களா என்ன? இஸ்லாமிய தீவிரவாதிகளை போலீஸ் பிடித்தால் உடனே சுட்டுக் கொன்றுவிட வேண்டும் என்று சொல்லுகிற இந்து தீவிரவாதத்தின் குரலாகவே நீ பேசுகிறாய். 



அப்படிச் செய்யாமல் போலீஸ் இருப்பதில் எரிச்சலடைந்து மிரட்டல் வேலையில் ஈடுபடுகிறாய். எந்த மதத்து திவிரவாதியாக இருந்தாலும் சரி, அவர்களை விசாரிக்காமல் சுட்டுக்கொன்றுவிட வேண்டும் என்று நினைக்கிறவர்கள் சார்பாக புறப்பட்டு வந்தவனும் அல்ல நீ. அப்படி நினைக்கிறவர்கள் கருத்தை ஏற்பதாக இருந்தால், மசூதியை இடித்து மதக்கலவரங்களை உற்பத்தி செய்த அத்வானியையும் அரசு இயந்திரத்தின் உதவியோடு முஸ்லிம்களை கும்பல் கும்பலாகக் கொல்ல ஏற்பாடு செய்த மோடியையும் சுட்டுக் கொல்ல நீ புறப்பட்டிருப்பாய்.
ஆனால் உனக்கு செலக்டிவ் அம்னீஷியா இருக்கிறது. நீ என்னைப்போல் ஒருவன் அல்லவே அல்ல. நான், குற்றம் சாட்டப்படுவர் மோடியானாலும், முகமது ஆனாலும் சரி முறையான நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்றே வலியுறுத்தும் சாமான்யன்.
உன்னைப் போல் ஒருவன் என்று நீ சொல்வது என்னையல்ல என்றால், யாரைப் பார்த்து அப்படிச் சொல்லியிருக்கிறாய்? படத்தில் இன்னொரு நாயகனாக வருகிற காவல் அதிகாரியைப் பார்த்துத்தான்.
அதுதான் அசல் அர்த்தம். நாங்கள் தான் எங்களைச் சொன்னதாக தப்பாக எடுத்துக்கொண்டிருக்கிறோம். அந்தக் காவல் அதிகாரி யார்? முதலமைச்சர், தலைமைச் செயலாளர் எல்லோரும் முழு அதிகாரத்தைத் தன்னிடம் கொடுத்தால் தான் பிரச்னையைத் தீர்க்க முடியும் என்று மிரட்டுபவர் அவர்.



முழு அதிகாரமும் போலீஸிடம் இருந்தால் தான் விசாரணையில்லாமல் சுட்டுக் கொல்ல முடியும் அல்லவா? அவர் கருத்தும் உன் கருத்தே தான். கடைசியில் நீ கேட்டபடி அந்தத் தீவிரவாதிகளை ஒப்படைக்கிறார். மூன்று பேர் ஜீப் குண்டில் செத்ததும் நீ அவர் ஆள்தான் என்பது அவருக்குத் தெரிந்துவிடுகிறது.



நீ எந்த இடத்திலும் குண்டு வைக்கவில்லை அது வெற்று மிரட்டல் தான் என்று பின்னர் போனில் சொல்லும்போது அது தனக்கு முன்பே தெரியும் என்கிறார்.



அப்படி தெரியுமென்றால், நான்காவது தீவிரவாதியை சுட்டுக்கொல்லும்படி அவர் சொல்லியிருக்கத் தேவையே இல்லையே. உன் மிரட்டலை சாக்காக வைத்து அவர் அந்தத் தீவிரவாதிகளை விசாரணையில்லாமல் கொல்லும் தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறார் என்பது தான் உண்மை.



கடைசியில் நீ இருக்கும் இடத்தையும், உன்னையும் கண்டுபிடித்த பிறகு உன்னை சுட்டுக் கொல்லாமல் கைகுலுக்கி வழியனுப்பி வைக்கிறார். ஏன்? நீ அவரைப்போல் ஒருவன் என்பதனால்தான். காவல் துறை என்கவுன்ட்டர் என்ற பெயரில் விசாரணையில்லாமல் தான் கொல்ல விரும்புபவர்களைக் கொல்லும் வசதிக்காக, உன்னைப் போன்றவர்களை மறைமுகமாக ஆதரிக்கும் என்பதுதான் உன்படத்திலிருந்துஎனக்குக் கிடைக்கும் முக்கியச் செய்தி. நீ நிச்சயம் என்னைப் போல் ஒருவன் அல்ல. நான் நிச்சயம் உன்னைப்போல் ஒருவனாக இருக்க விரும்பவே மாட்டேன்.


நன்றி : குமுதம் வார இதழ் 14.10.2009

Tuesday, October 13, 2009

முஸ்லீம்களுக்கு எதிரான திட்டமிட்ட சதி!

சத்தியமார்க்கம் இனைய தளத்தில் வந்த இந்த கட்டுரையை இங்கு பதிவது அவசியம் என கருதியதால் இப்பதிவு. இனி கட்டுரை.......
ஒரு நாட்டின் நீதி, நியாயம், பாதுகாப்பு ஆகியவை நீதித்துறை, காவல்துறை, உளவுத்துறை, இராணுவத்துறை போன்றவற்றால் உறுதிப்படுத்தப்படுகிறது. இதில் முதல் இரண்டு விஷயங்களைத் தவிர்த்து மூன்றாவது விஷயத்தை உள்/வெளி தீய சக்திகளிடமிருந்து நாட்டு மக்களை காவல்துறை, உளவுத்துறை, இராணுவத்துறை போன்றவை பாதுகாக்கின்றன. நாட்டு மக்களிடையே நீதி, நியாயத்தை நீதித்துறை நிர்வகிக்கிறது.
உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயகக் குடியரசான இந்தியாவில், நாடு விடுதலை பெற்ற நாள் முதலே நாட்டுப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கும் பாதுகாப்புத் துறைகள் பெரும்பாலும் முஸ்லிம் சமுதாயத்துக்கு எதிராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை அனைவரும் அறிவர். இதில் முக்கியமாக உளவுத்துறையின் முக்கிய அதிகாரங்களில் ஒரு முஸ்லிம் கூட தேர்ந்தெடுக்கப்பட்டு விடாமல் மிக கவனமாக நாட்டு நிர்வாகம் செயல்பட்டு வந்திருக்கின்றது. இந்திய மொத்த மக்கள் தொகையில் சுமார் 15 சதவீதத்திற்கும் அதிகமாக வாழும் முஸ்லிம் சமுதாயத்திற்கு, நாட்டின் அதி உன்னதத் துறைகளில் ஒன்றான உளவுத்துறையில் ஓர் இடம் கூட இல்லை என்பது சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விஷயம் இல்லை.இதன் பின்னணியில் திட்டமிட்ட சதி தொடர்கிறது என்பதைச் சாதாரணமாக சிந்திக்கும் எந்த ஒரு பாமரனும் விளங்கிக் கொள்வான்.
அதே போன்றே காவல்துறை மற்றும் இராணுவத்துறைகளில் முஸ்லிம்கள் பெருவாரியாகப் புறக்கணிக்கப்படுவதும் நாட்டில் இச்சமுதாயத்திற்கு எதிராக நடத்தப்படும் திட்டமிட்டத் தாக்குதல்களிலும் துர் பிரச்சாரங்களிலும் இவ்விரு துறைகளும் மிக அதிகமாக பயன்படுத்தப் பட்டு வருவதும் சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தியக் குடிமக்களாக நாட்டின் எல்லாவித வசதிகளையும் அனுபவிக்க அடிப்படை உரிமை பெற்ற முஸ்லிம் சமுதாயம், தங்களுக்கான பாதுகாப்பு, கொஞ்சம் கொஞ்சமாக அருகி வருவதை நன்றாக அறிந்திருந்தும் இன்னமும் ஒரு சிறு நம்பிக்கையுடன் பொறுமையைக் கைவிட்டு விடாமல் அமைதியாக வாழ்ந்து வருவதன் காரணம், "தங்களுக்கு நீதி, நியாயம் மறுக்கப்படாது; சத்தியம் ஒருநாள் வெல்லும்" என்ற நீதித்துறையின் மீதான நம்பிக்கையின் அடிப்படையிலாகும். ஆனால், அதற்கும் சமீபகாலங்களில் சாவுமணியடிக்கப்படுகிறதோ என்ற சந்தேகங்கள் முளை விட ஆரம்பித்துள்ளன. அதற்குத் தகுந்தாற் போன்றே, பாரபட்சமற்று நடுநிலையாக நாட்டில் நீதி, நியாயத்தை நிலைநாட்ட வேண்டிய நீதித்துறையிலும் கறுப்பு ஆடுகள் புகுந்து விட்டதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துள்ளன.
இதற்கு உதாரணமாக பல்வேறு நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டலாம். நாட்டில் நடக்கும் உப்பு சப்பில்லா விஷயங்களிலிருந்து ஹிந்துத்துவத்திற்குக் காவடி தூக்கும் விஷயங்கள் வரை தேவையெனில் நேரடியாக எவ்வித மனுவோ, புகாரோ இன்றியே அவ்விஷயங்களில் தலையிட்டுக் கருத்தும் உத்தரவுகளும் பிறப்பிக்கும் நீதித்துறை, முஸ்லிம்களின் விஷயங்கள் எனும் போது மட்டும் கண்ணைக் கட்டிக் கொள்கின்றன.
திட்டமிட்டே முஸ்லிம்களின் மீதும் முஸ்லிம் இயக்கங்களின் மீதும் செய்யாத விஷயங்களை தலையில் கட்டும்,
தென்காசி குண்டு வெடிப்புகளிலிருந்து மாலேகான் குண்டுவெடிப்பு வரை நாட்டில் நடக்கும் தீவிரவாத, பயங்கரவாத நிகழ்வுகளாகட்டும்
சொராபுதீன் ஷேக் முதல் பட்லா ஹவுஸ் சம்பவங்கள் வரை முஸ்லிம்களைத் தேடிப் பிடித்து, சிட்டுக் குருவிகளைப் போல் சுட்டுக் கொன்று விட்டு, "பயங்கரவாதிகள் என் கவுண்டரில் கொல்லப்பட்டனர்" எனப் பொய்க் கதை பரப்பும் பூச்சுற்றல்களாகட்டும்
குஜராத், மும்பை, பாகல்பூர், சூரத், கோவை நரவேட்டைகள் முதல் பாபரி மஸ்ஜித் இடிப்பு வரை அவற்றுக்காக நியமிக்கப்பட்ட கமிஷன்கள் குற்றவாளிகள் எனக் கைக்காட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கைகட்டிக் கொண்டிருப்பதாகட்டும்,
முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட எந்த ஒரு அநியாயத்திலும் நீதி, நியாயம் வழங்குவதில் நீதித்துறை பாரபட்சத்துடன் அநீதி இழைத்தே வந்துள்ளது.
சமீபத்தில் இந்நிலை மாறி, முஸ்லிம் சமுதாயத்தின் மீதும் இஸ்லாத்தின் மீதும் சங்கபரிவார அமைப்புகளும் காவல்துறையும் பார்ப்பனீய ஆதரவு ஊடகங்களும் இணைந்து நடத்தும் திட்டமிட்ட காழ்ப்புணர்வு வதந்திகளை நீதித்துறைகளும் அப்படியே ஏற்றெடுத்து, நாட்டின் மிக உயர்ந்த, உன்னத பீடத்தில் நீதியைக் காப்பாற்ற வேண்டிய நிலையிலிருக்கிறோம் என்பதை நீதித்துறை மறந்து, சங்கபரிவாரத்தின் பிரச்சார பீரங்கிகளாக மாறி நீதித்துறையையே களங்கப்படுத்தும் விதத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் மீது நேரடியாகவே தாக்குதலில் ஈடுபட ஆரம்பித்துள்ளன.
இதன் நேரடி உதாரணம், முஸ்லிம்கள் தாடி வைக்கும் விஷயம் தொடர்பாக மத்தியபிரதேச மாநிலத்திலுள்ள முஹம்மது சலீம் என்ற மாணவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த ஒரு வழக்கில், "தாடி வைப்பது தாலிபானிசமாகும்" என நீதிபதி மார்க்கண்டேய கட்சு தலைமையிலான குழு அதிகப்பிரசங்கித்தனமாக, வழக்குக்குத் தொடர்பில்லாத கருத்தைத் தெரிவித்ததாகும்.
"அவரவர் அவரவரின் மதத்தைச் சுதந்திரமாக பின்பற்றி வாழலாம்" என அடிப்படை உரிமை வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, இஸ்லாத்தின் மீது தவறான எண்ணம் தோன்றும் விதத்தில் கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி, கருத்தும் தீர்ப்பும் அளித்தார் நீதித்துறைக்கே களங்கமான கட்சு. அந்தத் தீர்ப்பை எதிர்த்து மனம் தளராமல் போராடியதால் முஹம்மது சலீமுக்கு, இன்னமும் கறைபடியாமல் இந்திய அரசியல் சாசனத்தையும் சட்டத்தையும் மதிக்கும் மற்றொரு நீதிபதியால்நியாயம் கிடைத்தது.
இது நாட்டின் அதி உன்னத உயர் பீடமான உச்சநீதி மன்றத்தில் நடந்தது என்றால், தற்போது இச்சம்பவம் நடந்து 6 மாதங்கள் முடியும் முன்னரே உச்சநீதி மன்றத்தின் அடுத்த இடத்தில் இருக்கும் ஓர் உயர்நீதி மன்றத்தில் அதனைப் பின்பற்றி மற்றொரு அநீதத் தாக்குதல், முஸ்லிம் சமுதாயத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ளது.
கேரள உயர் நீதிமன்றத்தின் முஸ்லிம் சமுதாயம் மீதான இத்தாக்குதலுக்குக் காரணமானச் சொல்லப் படும் நிகழ்வு:
கேரள மாநிலம் பத்தனம் திட்டை பகுதியிலுள்ள செயிண்ட் ஜோன்ஸ் கல்லூரியில் பயிலும் இரு எம்.பி.ஏ மாணவிகள் இஸ்லாத்திற்கு மதம் மாறத் தீர்மானித்துள்ளனர். முன்னர் இவர்கள் இருவரும் அக்கல்லூரியின் முன்னாள் மாணவர் ஷாஹின்ஷா என்பவரையும் கேரள அரசுப் பேருந்தில் தற்காலிக நடத்துனராகப் பணிபுரியும் சிராஜுதீன் என்பவரையும் விரும்பித் திருமணம் செய்துள்ளனர். இவர்கள் இஸ்லாத்திற்கு மாறுவதாகத் தகவல் கிடைத்ததும் அப்பெண்களின் பெற்றோர் காவல்நிலையத்தில், "தங்கள் மகள்களைக் கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சி செய்ததாகவும் அவர்களை மானபங்கப்படுத்த முயன்றதாகவும்" கூறி அவ்விருவர் மீதும் புகார் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவ்விருவர் மீதும் காவல்துறை வழக்கு பதிவுப் செய்துள்ளது. இதற்கிடையில் வழக்குத் தொடுக்கப்பட்ட இருவரும் உயர்நீதி மன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு செய்துள்ளனர்.
பெற்றோரின் புகாரை மறுத்து, "தங்களின் சொந்த விருப்பப்படியே இஸ்லாத்திற்கு மாறியதாகவும் தாங்கள் விரும்பியே திருமணம் செய்து கொண்டதாகவும்" அவ்விரு பெண்களும் நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். சாதாரணமாக மேஜர் ஆனவர்களின் மணமுடிவுக்கு மதிப்பளித்து, அவர்கள் விரும்புபவர்களைத் திருமணம் செய்து இணைத்து வைக்கும் நீதிமன்றம், அப்பெண்களின் வாக்குமூலத்திற்குப் பின்னரும் வழக்கைத் தள்ளுபடி செய்யாமல், அவர்களைப் பெற்றோருடன் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், காவல்துறை அவ்விளைஞர்களுக்கு எதிராக கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாகவும் வழக்குப் பதிவு செய்தது.
ஆரம்பத்தில் முதல் தகவலறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வேளையில், "வழக்கில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களுக்கு எதிராக அப்பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்" எனக் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. ஆனால், இதனை அப்பெண்கள் மறுத்ததோடு, தங்கள் "சொந்த விருப்பத்தின் பேரிலேயே திருமணம் புரிந்ததாகவும் தங்களை எவரும் மதம்மாறக் கட்டாயப்படுத்தவில்லை" என்றும் காவல்துறை தாங்கள் கூறாததை எழுதியுள்ளதாகவும் மறுத்திருந்தனர். இருப்பினும் காவல்துறை அவ்விளைஞர்கள் மீதான வழக்கைத் தொடர்ந்தது.
இவ்வழக்கின் மீதான முன்ஜாமீன் மனு மீதான விசாரணை வேளையிலேயே, உச்சநீதி மன்றத்தைத் தொடர்ந்து கேரள உயர்நீதி மன்றமும் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தும் விதத்திலான ஆட்சேபகரமான கருத்துகளைத் தன் உத்தரவில் கூறியுள்ளது.
கேரள உயர்நீதி மன்றம் தன் உத்தரவில், "முஸ்லிம் இளைஞர்கள் மற்ற சமுதாயப் பெண்களிடம் காதலிப்பது போன்று நடித்துப் பின்னர் இஸ்லாமிய மதத்துக்கு மதமாற்றம் செய்கின்றனர். இதற்காக அவர்களுக்குக் கணிசமான பணம் கிடைக்கின்றது. இயக்கங்களும் சில நபர்களும் இத்திட்டத்தை நடைமுறைபடுத்தச் செயல்படுகின்றனர். இவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் உதவியும் கிடைத்துள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் பெண்கள் பிரிவு தலைவர் கதீஜா இப்படிப் பட்ட பெண்களை நேரடியாகச் சந்தித்துள்ளார். அது மட்டுமின்றி பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் தொண்டர்களும் இப்பெண்களைச் சந்தித்துள்ளனர்" என்று நீதிமன்றம் உத்தரவின் போது கூறியது.
"மத்திய அரசின் தலையீடும் இவ்விஷயத்தில் தேவை. கட்டாய மதமாற்றத்தைத் தடுப்பது தொடர்பான மத்திய அரசின் நிலைபாட்டை விவரித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட வேண்டும்" எனவும் ஆலோசனை கூறிய நீதிமன்றம், "இவ்வாறு செயல்படும் 'லவ் ஜிஹாத்' மற்றும் 'ரோமியோ ஜிஹாத்' ஆகிய இயக்கங்களின் செயல்பாட்டையும் அந்த இயக்கங்களின் நோக்கம், அமைப்பு, பின்பலம், கேரளத்திற்கு வெளியேயும் சர்வதேச அளவிலும் இவ்வியக்கங்களின் தொடர்புகள், பொருளாதார அடிப்படை, வெளிநாட்டுப் பொருளாதார உதவி, கள்ளநோட்டு-கள்ளக்கடத்தல்-போதைப் பொருள்-தீவிரவாத அமைப்புளுடனான தொடர்பு, கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள இவ்விஷயங்கள் தொடர்பான வழக்குகளின் கணக்கு, மதமாற்றத்திற்கு இரையான பள்ளி-கல்லூரி மாணவிகளின் எண்ணிக்கை போன்ற விஷயங்களை உட்படுத்தி டி.ஐ.ஜியும் மத்திய உள்துறை அமைச்சகமும் மூன்று வாரங்களுக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்" எனக் கூறி முன்ஜாமீன் வழக்கை இரு வாரங்களுக்குத் தள்ளி வைப்பதாக உத்தரவிட்டுள்ளது.
1. இரு இளைஞர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் பாதிக்கப்பட்டதாக சேர்க்கப்பட்டுள்ள இரு பெண்களும் வயதுக்கு வந்த மேஜர்களாகும்.
2. அவ்விரு பெண்களும் தாங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் மதம் மாறி, முஸ்லிம் இளைஞர்களைத் திருமணம் புரிந்ததாக நீதிமன்றத்திலேயே வாக்குமூலம் கொடுத்துள்ளதோடு தங்கள் கணவர்களுக்கு எதிராகத் தங்களிடம் எவ்விதப் புகாரும் இல்லை என்றும் மறுத்திருக்கின்றனர்.
இவ்வளவு தெளிவாக வழக்கு தொடுக்கப்பட்ட இளைஞர்களுக்குச் சாதமாக வழக்கில் வாதிகளாகச் சேர்க்கப்பட்டவர்களே கூறிய பின்னரும் அவர்கள் மீதான வழக்கு, பொய் வழக்கு என அப்பட்டமாக தெரிந்த பின்னரும் வழக்கைத் தள்ளுபடி செய்யாததோடு, முன் ஜாமீனும் வழங்காமல் வழக்கை மாற்றி வைத்து சட்டத்தை மீறியுள்ளது கேரள உயர் நீதிமன்றம்.
அத்தோடு நின்றிருந்தால் கூட, முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக எப்போதும் போல் அரசு நிர்வாகங்கள் செயல்படுவது தானே என முஸ்லிம் சமுதாயம் சமாதானமடைந்திருக்கும். ஆனால், அனைவருக்கும் சமமான நீதி, நியாயத்தை வழங்க வேண்டிய பாரபட்சமற்ற நீதித்துறை கூறிய கருத்துகளும் அரசுக்கு நீதித்துறை தானே முன்வந்து வழங்கிய உத்தரவும் மீண்டுமொரு "நான் குதிருக்குள் இல்லை" என்ற வேஷத்தை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.
இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒரு பெண், கேரள மாநிலக் காவல்துறை ஐ.ஜி ரேங்கில் உள்ள ஓர் அதிகாரியின் நெருங்கிய உறவினராவார். மற்றொரு பெண், திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்பெஷல் ப்ராஞ்ச் அலுவலகத்தில் பணி புரியும் ஓர் அதிகாரி மற்றும் கேரள மாநில பாஜக மாநிலத் தலைவர் ஆகியோரின் குடும்பத்தவராவார். இவர்களின் நெருக்குதலிலேயே இவ்விரு இளைஞர்களுக்கு எதிராக பொய் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதும் நீதிதுறையினுள் புகுந்துள்ள கறுப்பு ஆடும் தலையாட்டி இருப்பதும் இதிலிருந்து வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
முஸ்லிம்களைச் சமூகத்தின் முன்னிலையில் குற்றவாளி கூண்டில் நிறுத்தும் தீராத ஆசையில், சங்கபரிவாரம் உருவாக்கிய ஒரு வாசகத்தை அதே வடிவில் பயன்படுத்திய கேரள உயர்நீதி மன்றத்தில் அமர்ந்திருக்கும் நீதிபதி கெ.டி. சங்கரன், தன் வருகையின் ஆரம்ப இடம் எது என்பதைத் தெளிவாக வெளிச்சமிட்டு காட்டியுள்ளார். "மதமாற்றம் நடத்துவதற்காக பள்ளி-கல்லூரி கேம்பஸ்களை மையமாக்கி லவ் ஜிஹாத் என்ற இயக்கம் செயல்படுவதாக" நீண்டகாலமாக சங்கபரிவார அமைப்புகள் நடத்திய பிரச்சாரத்தில் பயன்படுத்திய அதே வாசகத்தை எவ்விதத் தயக்கமும் இன்றி அப்படியே எடுத்தாண்டு, இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க காவல்துறை டி.ஜி.பிக்கு நீதிபதி சங்கரன் உத்தரவிட்டுள்ளார்.
கொள்கையையும் கோட்பாட்டையும் கட்டிக்காக்கவும் அக்கிரமம், அநியாயங்களுக்கு எதிராக நீதி, நியாயத்தைப் பாதுகாத்து அனைத்து மக்களுக்கும் சமநீதியை நிலைநாட்டவும் நடத்தும் பல்வேறு வழியிலான முயற்சிகளுக்கே இஸ்லாத்தில் "ஜிஹாத்" என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இறைத்தூதரும் முஸ்லிம் சமுதாயமும் மிகவும் மேன்மையானதாக கருதும் இச்சொல்லைச் சமூகத்தின் முன்னிலையில் மோசமானதாக சித்தரிக்கும் நோக்குடனே சங்கபரிவாரம் இது போன்ற வாசகங்களை உருவாக்குகின்றது.
இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகப் பிரச்சாரம் நடத்துவதற்காகவும் தங்களின் ஹிந்துத்துவ அஜண்டாவைச் செயல்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளை மூடி மறைப்பதற்குமே "லவ் ஜிஹாத்" என்ற வாசகத்தை சங்கபரிவாரம் உருவாக்கி, சமூகத்தில் பரவவிட்டது. சில மாதங்களுக்கு முன்னர், சில சங்கபரிவார அமைப்புகள் இதே வாசகத்தைப் பயன்படுத்தித் துண்டு பிரசுரங்களும் சுவர் விளம்பரங்களும் பிரச்சாரங்களும் நடத்தியிருந்தன.
அநாவசிய விவாதங்களை உருவாக்க வேண்டாம் என நினைத்தோ என்னமோ முஸ்லிம்களிடமிருந்து சங்கபரிவாரத்தின் இச்சொல் பிரயோகத்துக்கு எதிராக எவ்வித எதிர்ப்புகளும் அச்சமயங்களில் எழவில்லை. அல்லது சங்கபரிவாரத்தின் எப்போதும் போலான கடைசரக்கு என சமுதாயம் அதனைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், எல்லா மக்களுக்கும் சமநீதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டிய நீதித்துறை, சங்கபரிவாரம் உருவாக்கிய அதே வாசகத்தைப் பயன்படுத்தி முஸ்லிம் சமுதாயத்தினை அவமானப்படுத்த முயன்றது முஸ்லிம்களுக்கு இடையில் மிகக் கடுமையான எதிர்ப்பைத் தோற்றுவித்துள்ளது.
இதற்கிடையில் "லவ் ஜிஹாத் அமைப்புக்கும் பாப்புலர் ஃப்ரண்டிற்கும் இடையிலுள்ள தொடர்பைக் குறித்து விசாரிக்க நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவைக் குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினரிடம் கருத்து கேட்டபோது, அவர்கள் நீதிமன்றத்தின் உத்தரவை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக கருத்துக் கூறியுள்ளனர் (விரிவாகப் பெட்டிச் செய்தியில்).
மடியில் கனமுள்ளவர்களுக்கே வழியில் பயமிருக்கும்! லாவ்லின் ஊழல் வழக்கில் கேரள கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிணராய் விஜயன் சேர்க்கப்பட்டபோது, அதனை எதிர்த்து, கேரளத்தைக் கம்யூனிஸ்ட் கட்சியினர் அல்லோகல்லோலப் படுத்தினர். சிபிஐக்கு எதிராகத் தரக்குறைவான வார்த்தைகளால் அர்ச்சிக்கவும் அவர்கள் தவறவில்லை. அதே போன்றே சில சங்கபரிவார அமைப்புகள் மீதும் காஞ்சி மடாதிபதி காமகோடி மீதும் வழக்குகள் தொடரப்பட்ட வேளைகளில், அவ்விசாரணைகளைத் தடுத்து நிறுத்தவும் அவ்வழக்குகளை விசாரித்த அதிகாரிகளுக்குக் கொலைமிரட்டல்கள் வரை விடுக்கப்பட்டதும் நாடறிந்ததாகும். இவ்வகையான தேசப்பற்றை(!) இவர்கள் வெளிப்படுத்தும் அதே வேளையில், பயங்கரவாதம் தீவிரவாதம் என மக்களைப் பயமுறுத்தும் சொற்களால் மக்களிடையே சங்கபரிவாரத்தாலும் அரசு இயந்திரங்களாலும் ஊடகங்களாலும் அறிமுகப்படுத்தப்படும் இது போன்ற இஸ்லாமிய இயக்கங்கள் தங்கள் மீது விசாரணை என அறிவிக்கப்பட்டால் முழு ஒத்துழைப்பு நல்கி தங்கள் தேசவிரோத(!) செயல்பாட்டைத் தெளிவித்து வருவது வியப்பளிக்கக் கூடியதாகும்!
ஜிஹாத் என்ற பரிசுத்தமான சொல்லுடன் லவ்(காதல்) என்ற சொல்லைச் சேர்த்து, ஆபாசப்படுத்த சங்கபரிவாரம் முயன்றது என்றால், ஆர்.எஸ்.எஸ்ஸை விட ஒரு படி மேலாக நீதித்துறை "லவ் ஜிஹாத்" என்பதுடன் "ரோமியோ ஜிஹாத்" என்ற புதிய ஒரு நையாண்டி வாசகத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக சங்கபரிவாரம் ஒரு படி குதித்தால் அதனை விட இரண்டு மடங்கு குதிக்க தாங்கள் ரெடி என இந்திய நீதித்துறை செயலால் வெளிப்படுத்தியுள்ளது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளக் கல்லூரி காம்பஸ்களில் முஸ்லிமல்லாத பெண்கள் இஸ்லாம் அல்லாத வேறு மதங்களில் உள்ள இளைஞர்களை விரும்பி திருமணம் புரிவது சர்வ சாதாரணமாக நடக்கும் நிகழ்வுகளாகும். இருப்பினும் இதுநாள் வரை இது ஒரு சமூகப் பிரச்சனையாக நீதிமன்றங்களிலோ அரசியல்வாதிகளிடமோ விவாதப்பொருளாகி இருக்கவில்லை. அதே சமயம், அப்பெண்கள் இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை மார்க்கமாக தேர்வு செய்த உடன், மிகப் பெரிய சமூகப்பிரச்சனையாக அது ஊதிப் பெரிதாக்கப் பட்டுள்ளது.
அத்தோடு நீதிமன்றமே பிரபலமான ஒரு முஸ்லிம் அமைப்பின் பெயர் எடுத்துக் கூறி, அதனை மோசமானதாக சித்தரிக்க முயன்றிருப்பதும் இயல்பான ஒன்றல்ல.
"லவ் ஜிஹாத்" எனும் இல்லாத ஓர் இயக்கத்தை - சங்கபரிவாரம் உருவாக்கி விட்ட கற்பனைப் பெயரை, தற்போது அகில இந்திய அளவில் அரசியலிலும் இறங்க தீர்மானித்துள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய சமுதாய அமைப்போடு தொடர்பு படுத்தி, நீதித்துறை இழுத்து விட்டிருப்பது திட்டமிட்ட சங்கபரிவாரத்தின் சதிச்செயல் என்ற சந்தேகத்தை முஸ்லிம் சமுதாய மக்களிடையே அதிக அளவில் கிளப்பியுள்ளது (முஸ்லிம் சமுதாயத் தலைவர்களின் கண்டனங்களைப் பெட்டிச் செய்திகளில் காண்க).
நீதிமன்றத்தின் இந்த அடாவடித்தனமான முஸ்லிம் சமுதாயத்தின் மீது சுமத்தியுள்ள அநீதமான கருத்துருவாக்கப் பின்னணியினைக் குறித்து ஆராய்ந்தால், மேலும் அதிர்ச்சி அதிகமாகின்றது!.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு, கேரளத்திலிருந்து இயங்கிய என்.டி.எஃப், தமிழகத்திலிருந்து இயங்கிய மனித நீதிப் பாசறை, கர்நாடகத்திலிருந்து இயங்கிய கே.எஃப்.டி என்ற கர்நாடகா ஃபெர்ட்டனிட்டி ஃபாரம் ஆகிய மூன்று அமைப்புகள் இணைந்து தென்னிந்திய அளவில் உருவாக்கிய முஸ்லிம் சமுதாயத்துக்கான சமூகநீதியை நிலைநாட்ட ஏற்படுத்தப்பட்ட கூட்டு அமைப்பாகும். பின்னர், அரசியலில் களமிறங்கத் திட்டமிட்ட இந்த அமைப்பு, சில மாதங்களுக்கு முன் கோழிக்கோட்டில் நடத்திய பிரமாண்ட பேரணியிலும் மாநாட்டிலும் மேலும் சில வட இந்திய மாநிலங்களில் இயங்கும் முஸ்லிம் அமைப்புகளும் இணைந்து கொண்டன.
இவ்வாறு மிகத் தெளிவாக முஸ்லிம் சமுதாயத்திற்கான சமூக நீதியைப் பெறும் நோக்கில் திட்டமிட்டு கட்டமைக்கப்படும் இந்த அமைப்பு, பெண்கள் அமைப்பு, கேம்பஸ்களில் மாணவர் அமைப்பு எனப் பல நிலைகளிலும் தங்களின் செயல்பாட்டைச் சிறிது சிறிதாக விரிவுபடுத்தி வருகிறது.
இந்நிலையிலேயே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் அதன் பெண்கள் பிரிவுத் தலைவியும் இந்த லவ், ரோமியோ விவகாரத்தோடு இணைக்கப் பட்டு, கேரள உயர் நீதிமன்றத்தால் வரம்பு மீறி அநீதமான முறையில் விமர்சிக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரம், முஸ்லிம் சமுதாயத்தின் மீதான சங்கபரிவாரத்தின் திட்டமிட்டத் தாக்குதல்களிலிருந்து முஸ்லிம்களைப் பாதுகாக்கும் நோக்கில் செயல்படும் இந்த அமைப்பை அழித்தொழிக்க, சங்கபரிவாரம் பலகாலமாகப் பல பொய்ச் செய்திகளை இந்த அமைப்பின் மீது பரப்பி வருவது அனைவரும் அறிந்த விஷயமாகும்.
தாங்கள் செய்யும் பல நிழலான செயல்களை முஸ்லிம்கள் மீதும் இஸ்லாமிய அமைப்புகளின் மீதும் சுமத்தி, முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் பயங்கரவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் சித்தரிப்பதில் சங்கபரிவாரம் மிகப் பெரிய வெற்றியை இந்தியாவில் அடைந்துள்ளதை அனைவரும் நினைவில் இருத்த வேண்டும்.
அவற்றில் சில பயங்கரவாதச் செயல்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் அவை மழுங்கடிக்கப்பட்டு, அவற்றில் தொடர்புடையவர்களாக பின்னர் கைது செய்யப்பட்ட சங்கபரிவார பிரதிநிதிகள் தண்டனையிலிருந்தும் மக்களின் கவனத்திலிருந்தும் திசை திருப்பப்பட்டு பாதுகாப்பாக நாட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
இதற்கு உதாரணமாக, தென்காசியில் இந்து முன்னணி அமைப்பு நிர்வாகிகளே தங்களது சொந்த அலுவலகத்துக்குக் குண்டு வைத்து விட்டு அதனை முஸ்லிம்கள் மீது கட்டிவைக்க முயன்றதும் பின்னர் உண்மை வெளிப்பட்டுபோய் கேவலப் பட்டு நின்றதும் நாடறிந்த உண்மை. ஆனால், அந்த வழக்கு ஊடகங்களில் ஆரம்பத்தில் முஸ்லிம்கள் செய்ததாக வெளியான போது இடம் பிடித்ததைப் போன்ற முக்கியத்துவம் உண்மையான சங்கபரிவார ஏஜண்டுகள் கைது செய்யப்பட்டபோது முக்கியத்துவம் கொடுக்கப்படாததோடு, அவ்வழக்கே தேய்ந்து, இன்று அவ்வழக்கு நடைபெறுகிறதா? என்பதே தெரியாத நிலையில் உள்ளது.
அதே போன்று மாலேகானில் சிமி அலுவலகம் முன்னிலையில் குண்டு வைத்த, இந்துத்துவ தீவிரவாதிசாமியாரிணி ப்ரக்யா சிங், அந்தக் "குண்டுவெடிப்புக்குக் காரணம் சிமிதான்" என்ற தோற்றத்தை ஏற்படுத்தி, ஊடகங்களும் காவல்துறையும் முஸ்லிம்களை வாட்டி எடுத்தன. பின்னர் நடுநிலையாகச் செயல்பட்ட காவலர்கார்கரேயின் உதவியால் உண்மை வெளியான பின்னர், சங்கபரிவாரத்தின் தீவிரவாதத்தைக் குறித்து இன்று வாய் திறப்பார் யாருமின்றி, தீவிரவாதி ப்ரக்யா சிங் உல்லாசமாக இருந்து வருகிறார்.
அதே போன்று குஜராத்தில் நரவேட்டை மன்னன் மோடி தலைமையில் அப்பட்டமாக எரித்தும் வெட்டியும் சுட்டும் 3000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களைக் கொன்றொழித்து விட்டு அதற்குக் காரணம் அதற்கு முன்னர் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமே காரணம் என்றும் அதனைச் செய்தவர்கள் முஸ்லிம்கள் தான் என்றும் வகையாகப் பொய் வியாக்கியானம்சங்கபரிவாரத்தால் அவிழ்த்து விடப்பட்டது. இன்று குஜராத்தில் நரவேட்டையாடிய கும்பல் அரசுப் பாதுகாப்புடன் சுகமாகச் சுற்றி வருகிறது.
இவ்வாறு தாங்கள் செய்யும் செயலை முஸ்லிம்கள் தலையில் கட்டி வைப்பதிலும் தாங்கள் செய்யும் படுபாதகச் செயல்கள் வெளியே வராமலிருக்க பொய்த் தகவல்களை முஸ்லிம்கள் மீதும் முஸ்லிம் அமைப்புகள் மீதும் பரப்பி முஸ்லிம் சமுதாயத்தின் மீதே ஊடகம், காவல்துறை, நீதித்துறை, உளவுத்துறை, மக்கள் என அனைவரின் கவனமும் பார்வையும் இருக்கும் விதத்தில் பார்த்துக் கொள்வதும் அதன் மறைவில் தாங்கள் செய்யும் அராஜக, அட்டூழியங்களை எவருடைய கவனத்தையும் ஈர்க்கா வண்ணம் செய்து முடிப்பதிலும் சங்கபரிவாரம் மிகத் திறமையாக செயல்பட்டு வருவது கண்கூடு.
சங்கபரிவாரத்தின் முந்தைய பல சதிச் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டால், பத்தனம் திட்டை கல்லூரி நிகழ்விலும் அதே போன்றதொரு திட்டமிட்ட சதியே நடந்துள்ளது என்ற சந்தேகம் உறுதிப் படுகிறது.
சங்கபரிவாரத்தின் ஒரு சிறப்புப் பிரிவாக, "முஸ்லிம் பெண்களைக் காதல் என்ற பெயரில் மயக்கிச் சீரழித்து, அவர்களை இந்து மதத்துக்கு மாற்றுவதற்கும் அல்லது குறைந்தபட்சம் முஸ்லிம் பெண்களின் வயிற்றில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் இந்துவாகப் பிறக்க வைப்பதற்கும்" நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ஒரு ரோமியோ இளைஞர் பட்டாளம் அளவுக்கதிகமாக வாரி இறைக்கப்பட்ட பணபலத்துடன் இயங்கி வருவதாக பல்வேறு முஸ்லிம் அமைப்புகளால் சங்கபரிவாரின் சுற்றறிக்கைச் சான்றோடு பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகாத நடவடிக்கையை மக்கள் மத்தியிலிருந்து திசை திருப்ப வேண்டுமெனில், அல்லது குறைந்த பட்சம் இந்துக்களிடையே அதன் இத்தகைய கேடுகெட்ட செயலுக்கு நியாயம் கற்பிக்க வேண்டுமெனில் அதற்கு ஒரு முஸ்லிம் அமைப்பு பலிகடாவாக்கப்பட வேண்டியது கட்டாயமாகும் என்பது சங்கபரிவாரத்தின் திட்டமாகும்.
எவ்வாறு சங்கபரிவாரத்தின் திட்டமிட்ட தீவிரவாதச் செயல்களுக்கு முஸ்லிம் அமைப்புகள் பலிகடாவக்கப்படுகிறதோ அதே போன்று அதன் இத்தகைய கேடு கெட்ட, கீழ்தரமான செயல்பாட்டிற்கும் ஒரு முஸ்லிம் அமைப்பு பலிகடாவாக்கப்பட வேண்டியது கட்டாயமாகும். அதற்காக சங்கபரிவாரத்தால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை அமைப்பே இந்த லவ் ஜிஹாத் அமைப்பாகும். அதனுடன் ஒரு கல்லில் பல மாங்காய் என்பது போல், தங்களுக்குக் கேரளாவில் மட்டுமின்றி இந்திய அளவில் சிம்ம சொப்பனமாக வளர்ந்து வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பையும் சிமியைப் போன்று இல்லாமல் அழித்தொழிக்கும் நோக்குடன், பாரபட்சமில்லாமல் செயல்பட வேண்டிய நீதித்துறையில் கறுப்பு ஆடுகளைப் புகுத்தித் தங்கள் திட்டத்தைச் செயல்படுத்துவற்குப் பயன் படுத்திக் கொள்ள முயன்று வெற்றியும் பெற்று விட்டதாகத் தோன்றுகிறது. ஆனால் அது தற்காலிக வெற்றியா? நிரந்தர வெற்றியா? என்பது போகப் போகப் புரியும்.
எது எப்படி இருந்தாலும் முஸ்லிம்களின் ஒரே நம்பிக்கையான நாட்டு மக்கள் அனைவருக்கும் சமநீதியை எவ்விதப் பாரபட்சமும் இல்லாமல் வழங்க வேண்டிய நீதித்துறையும் சிறிது சிறிதாக இவ்வாறு களங்கம் அடைந்து வருவது நல்ல அறிகுறியல்ல.
அரசின் எல்லாத் துறைகளிலும் சங்கபரிவார வெறியர்கள் புகுந்துள்ளனர் என்பது நாடறிந்த உண்மை தான். ஆனால், அது நீதித்துறை முழுவதும் புகுந்து செல்லரித்து அழிக்குமானால், கதி கெட்டு அழிவின் விளிம்புக்குச் செல்லும் சமுதாயத்தின் கோபக்கனல் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைக் கூற இயலாது! அதனை உணர்ந்து ஆரம்பத்திலேயே நீதித்துறையைத் தூய்மைபடுத்துவது மத்திய-மாநில அரசுகளின் கடமையாகும்!
நன்றி: சத்தியமார்க்கம்Read more: http://kointha.blogspot.com/2009/10/blog-post_13.html#ixzz0TswYGV8fRead more: http://kointha.blogspot.com/2009/10/blog-post_13.html#ixzz0TswYGV8f