Friday, November 6, 2009

புர்கா போட்டுண்டா என்ன

http://vidhoosh.blogspot.com/2009/11/blog-post_06.html
எனக்கு இன்னும் புர்கா, பக்டி, கூங்கட் போன்றவற்றை அணியும் அவர்களது கலாச்சாரமோ இல்லை அவர்களது புனித நூல்களையோ முழுமையாக படிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை. அதனால் பர்தா தேவையா இல்லையா என்னவென்றெல்லாம் ஆராய்ச்சி பண்ணும் அளவுக்கு கிஞ்சித்தும் தகுதி இல்லாத எனக்கு இதென்ன கேள்வி?

இப்போதெல்லாம் ப்யூட்டி பார்லர் போய் வெய்யிலில் கருத்துப் போன என் தோலை வெளுக்கச் செய்யும் பிளீச்சிங், ஸ்கின் டோனிங் போன்றவற்றுக்கு சில ஆயிரங்களை செலவழித்து விட்டு, இரு சக்கர வாகனங்களில் போகும் போதும்,

அக்னி நட்சத்திரத்தின் போது சென்னை அண்ணா சாலை முதல் தம்புரான்பட்டி வரை இருக்கும் மக்கள் அனைவரும் ஈரத்துண்டை தலையில் போட்டுக் கொண்டாமாதிரியே நானும்,

பன்றிக் காய்ச்சல் பயத்தில் உலகம் முழுதும் இருந்த பகுத்தறிவாளர்களும் செய்ததையும் போலவே, நானும் ஏதோ ஒரு காரணத்தால் பாதுகாப்பு கருதி, துப்பட்டாவையோ, கர்சீப்பையோ இல்லை துணிக்கிழிசலையோ, இல்லை ஐம்பது ரூபாய்க்கு விற்ற மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கும் மாஸ்க் அல்லது ஏதோ ஒன்றையோ அணிந்து என்னைப் பாதுகாத்துக் கொள்ள வாயையும் மூக்கையும் மூடிக்கொண்டேன்.

அதே வாயால் பேசும்போதும் 'பெண்ணடிமைத்தனம்' என்று நான் பேசும் போதும் சிறிது யோசித்து விட்டு பேசினால் நன்றாக இருக்கும். ஆண்களிடம் இருந்து பெண்ணைப் பாதுகாப்பது என்று இன்னும் ஏதேதோ காரணங்கள் கூறினாலும், எனக்கு தோன்றிய ஒன்றையும் பகிர விரும்புகிறேன்.

பாலைவனங்கள், மணற்பகுதிகள், அதிக வெய்யில் சூடு, தூசிக்காற்று மற்றும் அனல் வீசும் காற்றுடைய பகுதிகளில் வாழும் ராஜஸ்தானியர்கள், அரபியர்கள், முகமதியர்கள் வாயையும், மூக்கையும் மறைக்கும் முகத்திரை (PARDA / BURKA) மற்றும் பக்டி (PAGDI) என்ற தலைப்பாகை அணிகிறார்கள். இதனால் என்ன லாபம்? இயற்கையாகவே அவர்கள் இருக்கும் சுற்று சூழல் மாசிலிருந்து தம்மைப் பாதுகாக்க இந்தமாதிரி எல்லாம் துணிகளையோ அல்லது உடலையே மறைக்கும் உடையோ அணிய வேண்டியுள்ளது.

இன்றைக்கு சென்னையில் இருக்கும் அனல் காற்றுக்கும், தூசிக்கும், கார்பன் மாசுக்கும் தினமும் நான் என் கண்ணைத் தவிர முகத்தின் எல்லா பகுதிகளையும் துப்பட்டாவால் மறைத்துக் கொண்டால்தான் வீசிங், தொண்டை எரிச்சல், வராமலும், கண்ணிலும் வாயிலும் மண் துகள்கள் விழாமலும், அதற்கும் மேல் ஒரு ஹெல்மெட் ஒன்றையும் அணிந்து கொள்ள வேண்டியிருப்பதால், இருக்கும் கொஞ்ச நஞ்ச தலை முடியும் கொட்டாமல் இருக்க தலைக்கும் ஒரு துணியை போட்டு மூடிக் கொள்ள வேண்டியிருக்கிறது. கண்ணில் தூசி விழாமல் இருக்கவும், UV கதிர்களிடமிருந்து தப்பிக்கவும், வெயிலில் கண் கூசாமல் இருக்கவும், ஒரு கறுப்புக் கண்ணாடியும் அணிந்துகொள்ள வேண்டியுள்ளது.

இது போதாது என்று என் கைகள் கருக்காமல் இருக்கவும், புடவை கட்டி டூ வீலர் ஓட்டும் போது இடது பக்கம் புடவைத் தலைப்பு விலகி விடும் பயத்திலும், கிளவ்சோ இல்லை, காட்டன் முழுக்கைச் சட்டை ஒன்றையும் மேலே அணிந்து கொள்ளவும் வேண்டி இருக்கிறது.

சிக்னல் போன்ற இடங்களில் கால் கீழே ஊன்றினால் புடவை மேலே ஏறிக்கொண்டு சில நேரம் ஆடு சதைப் பகுதிகள் வரை தூக்கிக் கொண்டு விடுவதால், எல்லோர் பார்வையையும் தவிர்க்கவென ஒரு டைட்ஸ் ஒன்றையும் அணிந்து கொண்டால்தான், என்னால் மாற்று சிந்தனைகளோ பயமோ இன்றி அலுவலகத்துக்கு புடவை அணித்து, இரு சக்கர வாகனத்தில் பயணிக்க முடிகிறது. அட தெரிஞ்சா தெரிஞ்சிட்டு போகட்டுமே என்றளவுக்கு இன்னும் துணியவில்லையோ என்னவோ போடா மாதவா.....

இங்கே சிக்னலில் எப்போது இவள் புடவை விலகும் - கணுக்கால் தெரியும், நாம் பார்க்கலாம் என்று மற்ற வாகன ஓட்டிகள் காத்திருக்கிறார்கள் என்றோ, கழுகுக் கண்கள் என்றோ, ஆணாதிக்கம் என்றெல்லாமோ, ச்சே இந்த உலகமே மோசம் என்றோ நான் கூற வரவில்லை.

என் சொந்த விருப்பு வெறுப்பின் பேரில், இதெல்லாம் நான் செய்கிறேன். அதே போல இந்த மாதிரி சுற்றுச்சூழலிலிருந்து தம்மை பாதுக்காக்க யாரோ ஒருவர் ஏற்படுத்திய சில பழக்கங்களை, காலப்போக்கில் ஹாமில்டன் வாராவதி அம்பட்டன் வாராவதியானது போலாகியதோ என்னவோ?

திருமதி. சகுந்தலா நரசிம்ஹன் எழுதியிருப்பதையும் பாருங்களேன்.

இதை படிச்சதும் தோன்றியதை சொல்லலாமே என்ற உணர்வுதான். சரியோ தவறோ? என் தினசரி டூ வீலர் ஆடை ஆயத்தம் செய்வதற்கு பதிலாக நானும் ஒரு புர்கா வாங்கி போட்டுண்டா என்ன? அதையே கொஞ்ச நாள் கழிச்சு சட்டமாக்கிட மாட்டீங்களே?

No comments: